"ஆட்லறி என்று சொல்லப்படும் எறிகணை வானத்தில் வேகமாக வருவது மட்டும்தான் எனக்குத் தெரிகிறது. நான் வீழ்ந்துவிட்டேன். ஆனாலும், என் நினைவை நான் இழக்கவில்லை. இடப் பெயர்வு காலம் முழுவதும் என்னுடன் இணைந்து பயணம் செய்து வந்த இரண்டு நண்பர்கள் பக்கத்தில் இறந்து கிடக்கிறார்கள். நான் எழுவதற்கு கஷ்டப்பட்டு முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் முடியவே இல்லை. வயிற்றில் ஏதோ பிசு பிசுப்பதை போல உணர்கிறேன். தொட்டுப் பார்த்தால் ரத்தம் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அருகில் ஆள், அரவம் எதுவுமே இல்லை எங்கு பார்த்தாலும் பிணங்கள் குவியல் குவியலாக என் கண்ணுக்கு மங்கலாக தெரிகிறது. மெதுவாக எழுந்து செல்கிறேன். வீதி ஒன்றில் மயங்கி நான் கிடந்திருக்க வேண்டும். லேசாக மயக்கம் தெளிந்தபோது, மருத்துவ துறையை சேர்ந்த இரண்டு பேர் பேசிக்கொள்வது என் காதுகளுக்கு கேட்கிறது..." முள்ளி வாய்க்கால் பேரழிவில் கடைசி நேரத்தில் உயிர் தப்பிய ஒருவர் அளித்த வாக்கு மூலத்தின் முன்னுரை இது!
உயிர் தப்பியவரின் பெயர் முருகன். மேலும், அவருடைய வாக்குமூலத்தில் இருந்து சில கண்ணீர் வார்த்தைகளை இதயம் கொண்டு படியுங்கள். "மருத்துவ பணியாளர்கள் இரண்டு பேர் பேசிக்கொள்கிறார்கள். இருவருமே இளைஞர்கள்தான் என்பது மட்டும் எனக்குப் புரிகிறது. மயங்கிய நிலையிலும் இவர்கள் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது.
"இவர் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவருடைய உடம்பு ரொம்பவும் சேதம் அடைந்துள்ளது." என்று மருத்துவப் பணியாளர்களில் ஒருவர் கூறுகிறார். அதனை மறுத்து இன்னொரு பெண்மணி "அவர் சாக மாட்டார். பாதிப்பு உடலில் இல்லை. மூத்திரப் பையில் மட்டும்தான்" என்கிறார். எனக்கு அவர்கள் சிகிச்சை அழிப்பது போல தெரிகிறது. நான் மயங்கி கிடந்தேன்.
நான் கண் விழித்தபோது யாருமே அங்கு இல்லை. எனக்கு மருத்துவம் அளிக்கப்பட்ட இடம் எறிகணைகளால் தாக்கப் பட்டிருப்பதை என்னால் யூகித்துக் கொள்ள முடிந்தது. என்னைச் சுற்றிலும் பல உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. எல்லா இடங்களிலும் ரத்தமும் சதை துண்டுகளுமாக காட்சியளிக்கின்றன. நான் எழுவதற்கு பெரிதும் முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் முடியவே இல்லை. மனதை தைரியப் படுத்திக் கொண்டு அனைத்தையும் கடந்து எழுந்து செல்கிறேன். எப்படியோ பதுங்கு குழிக்குள் வந்து விட்டேன். அங்கே இருந்த எல்லோருமே காயப் பட்டு இருக்கிறாகள். இன்னமும் எரி கணைகள் பதுங்கு குழிகளுக்கு உள்ளும் வெளியிலும் விழுந்து வெடித்துக் கொண்டே இருந்தன. அதற்குள் உட்கார்ந்தால் மரணம் நிச்சயம். எனவே, பதுங்கு குழியை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு அனைவருமே வந்து விட்டார்கள்.
நடக்க முடியாதவர்கள், நகர முடியாதவர்கள் என்று பலரும் அங்கு இருந்தனர். நான் பதுங்கு குழியை விட்டு வெளியேறுவதா அல்லது மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க அங்கேயே தங்கி விடுவதா என்ற குழப்பத்தில் இருந்தேன்.
இதற்கு என் தம்பி தான் காரணம். உடன் பிறந்தவர்களில் கடைசியில் பிறந்தவன் அவன். அவன் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்து இருந்தான். அவனை சுமந்து கொண்டுதான் செல்ல வேண்டும். சுமந்து செல்வதற்கு என் உடல் நிலை இடம் தராது என்பதை என் தம்பியும் நன்கு உணர்ந்தே இருந்தான். என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.
குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. என் தம்பி என்னை வேகப்படுத்தினான். "நீங்கள் போய் விடுங்கள் அண்ணா. கடைசி நேரத்தில் என்னை காப்பற்றி விடுவார்கள். நான் பிழைத்துக் கொள்வேன்." என்று ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்லிக் கொண்டே இருந்தான். ஒரே அடியாக எல்லோரும் நிர்பந்தித்து என்னை வெளியேறும்படி வற்புறுத்தினார்கள். தம்பியின் மோசமான நிலையைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து வெளியேற மனமே இல்லாமல் கண்ணீருடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். அங்கிருந்து முகாம் வந்து , மருத்துவ சிகிச்சைப் பெற்றேன். தொண்டு நிறுவனம் ஒன்றின் அடையாள அட்டை எனக்குப் பெரிதும் பயன் பட்டது. அதை வைத்து முகாமை விட்டும் வெளியேறி விட்டேன்.
இன்று உயிர் ஆபத்து நீங்கி, வாழ்க்கை ஒருவிதமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றாலும்., கடைசியில் முகாமை விட்டு வெளியேறும் தருவாயில் எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. நான் பதுங்கு குழியை விட்டு வெளியேறியப் பின்னர் , இராணுவம் அங்கு வந்ததாகவும் வெளியேற முடியாமல் உடல் பாதிக்கபட்டு பலத்தக் காயங்களுடன் அங்கேயே இருந்த அனைவரையும் இராணுவம் இயந்திர துப்பாகியால் சுட்டு விட்டு அப்படியே மண்ணை போட்டு மூடி விட்டதாகவும் செய்தி கிடைத்தது" என்று முடிகிறது முருகனின் வாக்குமூலம்!
இதை வாசிக்கும் போதே வலிக்கிறதே...அதை அனுபவித்த முருகனின் வேதனை எப்படியிருக்கும்?
இப்படி யோசித்த நேரத்தில்தான் தமிழ்வாணி என்ற பெண்ணைப் பற்றி தெரியவந்தது. அவரது வேதனை அதீத வேதனையாக இருந்தது!
தமிழ்வாணி....பிரிட்டனில் பயோ மெடிக்கல் படித்த பட்டதாரி. ஈழத்தில் பலமுறை இடப் பெயர்வுக்கு உள்ளாகி 1994 ம் ஆண்டு யாழ்பாணத்தை விட்டு ப்ரிட்டைனுக்கு குடியேறி பட்டப் படிப்பை முடித்தவர். இறுதி யுத்தம் நடக்கும் போது ஈழத்தில்தான் இருந்தார். யுத்தப் பிரதேசத்தில் இவர் சிக்கிக் கொள்கிறார். இதற்காக அச்சம் கொண்டு பயத்தில் உறைந்து போகாமல், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பணிகள் செய்யத் தொடங்கி விடுகிறார்.
யுத்தம் முடிந்த பின்னர் சந்தேகத்தில் முகாமில் வைத்து நான்கு மாதங்கள் விசாரிக்கப் படுகிறார். உலகம் முழுவதிலும் மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தின. பிரிட்டன் அரசாங்கமும் தனது நாட்டின் குடியுரிமைப் பெற்ற ஒருவரை விடுவிக்க வேண்டும் என்றது. கடைசியில் விடுவிக்கப் பட்டு பிரிட்டன் போய் சேர்ந்தார். முள்ளி வாய்க்காலில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதை உலகுக்கு தெரிவிப்பதில் முக்கிய நபராக தமிழ்வாணி இன்று கருதப் படுகிறார்.
"போர் 2008 மே மாதம் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. குறுகிய நிலப் பரப்பில் குவிக்கப்பட்ட மக்களின் நிலை என்ன என்ற கவலை உலக சமுதாயத்தை கவ்விக் கொண்டது. மக்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று மனித நேயம் உள்ளவர்கள் துடித்துப் போனார்கள்.
அப்போது இலங்கை அரசு "குண்டுகள் வெடிக்காத அமைதிப் பிரதேசங்களை உருவாக்கி , அதில் பொதுமக்களில் ஒருவரைக் கூட சாக விடாமல் பாதுகாப்போம்." என்று ஐக்கிய நாடுகள் சபைக்கும் உலக சமூகத்துக்கும் ஒரு வாக்குறுதியை அளித்தது. அது வஞ்சகமான வாக்குறுதி.
நந்திக் கடலுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதிதான் அமைதி மண்டலமாக அறிவிக்கப்பட்டது. புதுமாதலன் முதல் வேல் முள்ளி வாய்கால் வரை பல கடலோர கிரமாங்களை உள்ளடக்கியப் பகுதி அது. இங்கு மக்கள் லட்ச கணக்கில் வந்து சேர்ந்த பின்னர்தான், இந்த படுகொலை நடந்தது.
-இது தமிழ்வாணியின் சாட்சியம்.
உயிர் ஊசலாட கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி நகர்ந்து, கடைசியில் உயிர் நின்று போன மருத்துவமனைகளைப் பற்றி தமிழ்வாணி கூறியுள்ளவை நம் ரத்தத்தை உறையவைக்க கூடியவையாக உள்ளது.
"மரத்தடி , மருத்துவச் சிகிச்சைக்கான இடமாக மாறியது. பின்னர், அறுவை சிகிச்சைகளை எங்கு நடத்துவது... அதுவும் அங்கேதான். கை, கால்களை அகற்றினால்தான் உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நிலைக்கு பலரும் வந்து விட்டார்கள். காயம் பட்டவர்கள் குவிந்து கிடக்கிறார்கள். ஒரு சில மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் மட்டுக்தான் எஞ்சி இருக்கிறோம்.
அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டும். மருந்து இல்லை. இருக்கிற மருந்தில் தண்ணீர் கலந்து மருந்தை கொடுத்துப் பார்க்கிறோம் . ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாமல் போய் விடுகிறது. மயக்க மருந்து இல்லாமலேயே இல்லாமலேயே அறுவை சிகிச்சை நடை பெறுகிறது. இரத்தம் கொட்டு கிறது. அதை அப்படியே பிளாஸ்டிக் பைகளில் பிடித்து , இரத்தத்தை யார் வெளியேற்றினார்களோ அவர்களுக்கே மீண்டும் ஏற்றுகிறோம். காயம் பட்டவர்களுக்கு கட்டுப் போடுவதற்கு. பழைய கந்தல் துணிகளையும் புடவைகளையும் பயன் படுத்துகிறோம்.
மருத்துவ விஞ்ஞானத்தால் இதனை நம்ப முடியாது என்றாலும் முள்ளி வாய்க்கால் யதார்த்தம் இதுதான். அறுவை சிகிச்சைக்கு தேவையான கத்திக் கிடைக்காமல் போனதால்...என்ன செய்வது என்கிற இக்கட்டான சூழலில் கறி வெட்டுவதற்காக பயன்படுத்தப் படும் கசாப்புக் கடை கத்திகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தோம். " என்கிறார் தமிழ்வாணி.
இதைப் போலவே அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட மனித அவயங்கள் ஒருபுறம் கவனிப்பார் அற்று குவித்து கிடந்தன என்பதையும் யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியுமா? அதுதான் முள்ளி வாய்க்காலில் மக்களோடு சேர்ந்து மரணமுற்ற மருத்துவத்தின் கதையுமாகும்.
( விதைப்போம் )


