அது ஒரு நீண்ட பயணம். மானுடம் எத்தனையோ பயணங்களை நிகழ்த்தி இருக்கிறது. இது போன்ற பயணத்தை இதற்கு முன்னர் யாராவது நிகழ்த்தி இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை.. முடிவற்ற பயணத்தை தொடங்கி விட்டார்கள் ஈழத் தமிழர்கள்.. ஆனால் இது அவர்கள் விரும்பிய பயணம் இல்லை.. கட்டாயப்படுத்தி, அவர்கள் மீது திணிக்கப்பட்ட பயணம்...வான்வெளியில் இருந்து விமானங்களும் தரை வழியாக பீரங்கிகளும் அவர்களை துரத்த... மூச்சுவிடக்கூட நேரம் கிடைக்காமல் புறப்பட்ட பயணம். மனைவி, மக்கள், வயது முதிர்ந்த தாய் தந்தை என்று அனைவரையும் வண்டியில் ஏற்றுகிறார்கள். சைக்கிளா, மோட்டார் சைக்கிளா, மாட்டு வண்டியா, டிராக்டரா என்று யோசிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. அவரவர்களிடம் எது இருக்கிறதோ அதில் பயணத்தை தொடங்கி விட்டார்கள். பயணத்தின் திசை எது? முடிவு எது என்பது தெரியாமலேயே புறப்பட்டு விட்டார்கள். ஆனாலும், அவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கியே திட்டமிட்டு நகர வைக்கப் படுகிறார்கள். செப்டம்பர் 2008 முதல் வாரத்தில் இவர்களின் பயணம் தொடங்கி இருக்க வேண்டும்.
கிளிநொச்சி யில் புறப்பட்டு முள்ளி வாய்கால் வந்து சேருவதற்கு இவர்களுக்கு ஒன்பது மாதங்கள் தேவைப் பட்டன.
நீண்ட இடப் பெயர்வு வாழ்க்கை தந்த மனக் காயங்களை, இன்றுவரை மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒருவரை நேரில் சந்திக்க நேரிடுகிறது. ஒடிந்து பொய் கிடக்கும் அந்த மனிதரிடம் சில கேள்விகளை கேட்கிறேன், இடப் பெயர்வு பயணம் பற்றி. தடை எதுவும் இல்லாமல் பேசத் தொடங்கி விடுகிறார். நாங்கள் ஓரிடத்தில் தங்குவதற்கான காலத்தை நிச்சயம் செய்வது போர் விமானங்களும் குண்டுகளும் தான் என்று கலக்கத்துடன் சொல்லத் துவங்கிய அவர், அடுத்துக் கூறியவை எனக்குள் வியப்பை தருகிறது. "இடப் பெயர்வில் எதை மறந்தாலும், கடப்பாரை, மண் வெட்டி, கூடை, கோணிப் பைகளை எடுத்துச் செல்ல மறப்பது இல்லை" என்கிறார்.
ஆதரவற்ற அந்த மக்களுக்கு உயிர் காக்கும் கவசங்களாக இருப்பவை அந்தக் கருவிகள்தான். எந்த இடத்துக்கு கால் கொண்டு பொய் சேர்க்கிறதோ அங்குப் படுத்துக் கொள்ள ஒரு பதுங்கு குழியை அமைத்துக் கொள்ள இந்தக் கருவிகள்தான் கை கொடுக்கின்றன என்பதால், இவை அவர்களை காக்கும் கருவிகள்!
பதுங்கு குழிகளை பொதுவாக 'பங்கர்ஸ் ' என்று அந்த மக்கள் அழைக்கிறார்கள். மண் பிளந்து, வியர்வை சிந்தி, மண்ணுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். அவற்றை சுற்றி, நான்கு ஓரங்களிலும் மணல் நிரப்பப்பட்ட மூடைகளை அடுக்கி வைத்து, மண் சரிவை தடுப்பதற்கு கோணிப் பைகள் தேவைப் படுகின்றன.
பதுங்கு குழிகள் பரிதாபத்திற்கு உரியவை. வான் மழைக்கும் விமானங்களின் குண்டு மழைக்கும் இடையில், இருவித தாக்குதல்களை மாறி மாறி சந்தித்துக் கொண்டு இருக்கின்றன அவை. குண்டு விழும் கொடுமைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது என்று கூறியவர், "வன்னி பிரதேசத்து தீவிர மழை, நொடிப் பொழுதில் பெரு வெள்ளத்தை உருவாக்கி விடும். பதுங்கு குழிகள் பள்ளம் என்பதால், கண் மூடி , கண் திறப்பதற்குள் அனைத்தையும் நீரில் மூழ்க வைத்து விடும்" என்கிறார்.
"பதுங்கு குழிகளில் சமையல் செய்ய இயலாது. பூமியின் மேற் பரப்பில்தான் தற்காலிக அடுப்புகளை உருவாக்கி, சமையலை தொடங்க வேண்டும். வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே, எம் பெண் மக்கள் அடுப்பை பற்ற வைப்பார்கள். அடுப்பு சூடேற பாத்திரத்தில் உள்ள அரிசியும் நீரும் கொதிக்க தொடங்கும். ஒரு சமயம் சமையலை முடிக்கும் தருணம், பசி எடுத்த குழந்தைகளின் அழு குரல் கேட்கிறது. உணவு வரும் என்று பதுங்கு குழிக்குள் மற்றவர்கள் காத்திருக்கிறார்கள். வானத்தில் விமானத்தின் உறுமல் கேட்கிறது. குண்டுகள் சீறி விழும் சத்தம் கேட்கிறது. காதைப் பொத்திக் கொள்கிறோம். அமைதி திரும்பிய சிறிது நேரம் கழித்துச் சென்று பார்க்கும் போது, அடுப்பு இருந்த இடத்தில ஒரு பள்ளம் இருக்கிறது. அன்று இரவு முழுவதும் பதுங்கு குழிக்குள் இருந்தவர்கள் அனைவரும் பட்டினிதான்" என்கிறார் சோகமாக.
பதுங்கு குழியில் திலீபன் என்ற பதினாறு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட கொடுமைகளை கேட்போம்...
திலீபன் துடிப்பானவன். ஈழ மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த போராளி திலீபனின் நினைவாக, இவனது பெற்றோர் இந்தப் பெயரை சூட்டியிருக்க வேண்டும். ஈழ மக்கள் பண்பாட்டு பெயர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். இதற்கான முன்னுதாரணமாக திலீபனின் பெற்றோரைக் கூற முடியும். இத்தாலியில் பிறந்த இவனை தமிழ்ப் பண்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்பதற்காக தாய்நாட்டுக்கு அழைத்து வந்தனர்.
அன்றுதான் தைப் பொங்கல். வெளியே மழை சாரல். துரு துறுவென்று பறந்து திரியும் திலீபனால் பதுங்கு குழியில் அடைந்து கிடக்க முடியவில்லை. இவனது பதுங்கு குழி சாலைப் போக்குவரத்துக்கு அருகில் இருக்கிறது. நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கையில் குடையுடன் புறப்படுகிறான் அவன். நண்பர்களோடு நீண்ட நேரம் உரையாடி மகிழ்ச்சி கொள்கிறான். காலத்தில் திரும்ப வேண்டும் என்று அம்மா சொன்னது அவன் நினைவிற்கு வருகிறது. வன்னிப் பிரதேசத்தின் மழைக்கால பசுமையும் வானம் மெல்ல தூறிக் கொண்டு இருந்த அந்த மாலையில், மனமகிழ்ந்து நடந்து வரும் வேளையில்தான், இதயத்தைக் கிழித்து எரியும் அந்தக் கொடுமையும் நடந்தது.
தாயும் தந்தையும் பதற்றம் கொண்டு, அவன் வருகைக்காக பதுங்கு குழியில் வாசலில் காத்து இருக்கிறார்கள். மகன் வருவது தெரிகிறது. முகத்தில் மகிழ்ச்சிப் பொங்க, அவனை அழைத்துச் செல்ல பதுங்கு குழிக்கு வெளியே நடந்து வருகிறார்கள். அந்த நேரம் பார்த்து எரிகணை ஒன்று வேகமாக வந்து அவர்கள் மீது விழுகிறது. திலீபனின் உடல் சிதைந்து ரத்தம் கொட்டுகிறது. அவன் அந்த இடத்திலேயே இறந்து விடுகிறான். அவனது தந்தைக்கு காதருகில் காயம். மயங்கி சுய நினைவை இழந்து விடுகிறார். வயிற்றில் சுமந்த மகனை தன கையில் சுமந்து அடக்கம் செய்கிறாள் தாய்.
மக்களை மட்டும் அல்ல.. பதுங்கு குழிகளையும் பழி தீர்கிறது சிங்கள ராணுவம். ஓரிடத்துக்கு ராணுவம் விரைந்து வருகிறது என்று தெரிந்தவுடன், மக்கள் இடப் பெயர்வுக்கு தயாராகி விடுகிறார்கள். பிறப்பு, இறப்பு முதலான சுக துக்கங்கள் அனைத்திலும் பங்கேற்று உயிருக்கும் பாதுகாப்பு அளித்த பதுங்கு குழிகளை விட்டு அவர்கள் பிரியத் தொடங்குகிறார்கள். ஆனாலும், பதுங்கு குழிகள் நன்றாகவே arinthu இருக்கின்றன... வெறி கொண்டு வரும் ராணுவ டாங்குகளின் பல் சக்கரங்களில் மிதி பட்டு, தாங்கள் இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகிறோம் என்பதை!
--இன்னும் விதைப்போம்


No comments:
Post a Comment